Thursday 22 May 2014

ஊத்துக்காடு எல்லையம்மன்


                 அகிலம் முழுவதும் அம்மன் ஆலயங்கள் பல இருந்தாலும் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவில் அமைந்துள்ள ஊத்துகாடு எல்லயம்மன் கோவில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வரலாறு

களைப்படைந்த மன்னன்

             தொண்டை மண்டல பகுதியை ஆட்சி செய்த விஜய நகர மன்னர்களில் கிருஷ்ணதேவராயருக்கு சிறப்பிடம் உண்டு.ஒருமுறை கிருஷ்ணதேவராயர் படைகள்,பரிவாரங்கள் இன்றி தனியாக ஒரு நாயை மட்டும் துணையாக கொண்டு காட்டுக்கு வேட்டையாட சென்றார்.வேட்டயாடுவதில் அதிக ஆர்வத்தைக் கொண்ட கிருஷ்ணதேவராயருக்கு காட்டில் நேரம் போனதே தெரியவில்லை.வெகுநேரம் ஆகிவிட்ட சூழ்நிலையில் மன்னருக்கு அதிக தாகம் எடுத்தது.பல இடங்களில் நீர் நிலைகளைத் தேடிப்பார்த்து சோர்ந்து விட்ட அவர்,ஒரு மரத்தின் அடியில் களைப்பாக அமர்ந்துவிட்டார்.அவருடன் சென்ற நாய்,தனது மன்னனின் நிலைகண்டு எங்காவது நீர்நிலை தென்படுகிறதா என்று தேடியது.வெகுதூரம் சென்ற அந்த நாய் ஓரிடத்தில் நீர்நிலையைக் கண்டது.பின்னர் அந்த நீரில் தனது உடலை நனைத்துக் கொண்டு மன்னன் இருந்த இடத்துக்கு விரைந்தது.

தடாகத்தில் அம்மன் சிலை

            அங்கு தாகத்தின் களைப்பால் கண்ணயர்ந்து போய் இருந்த மன்னனின் முன்பாக தனது உடலை சிலிர்த்தது.அதில் இருந்து தெறித்த நீர்துளிகள் முகத்தில் பட்டு மன்னன் கண் திறந்தான்.விழித்தெழுந்த மன்னர் தனது வளர்ப்பு நாய்,நீர் தடாகம் உள்ளதை கண்டறிந்து வந்திருப்பதை புரிந்து கொண்டு எழுந்தார்.நாயனது குரைத்தபடியே நீர் தடாகத்தை நோக்கி ஓடியது.தடாகத்தை அடைந்ததும் மகிழ்ச்சி அடைந்த மன்னர் நீரை பருக முயன்றார்.



               அப்போது அவருக்கு அருகில் எலுமிச்சை பழம் ஒன்று மிதந்து வந்தது.
அவர் அதைப் பார்த்துகொண்டிருந்த வினாடி,நீர் தடாகத்தில் இருந்து ஊற்று
தண்ணீர்போல் நீர் மேல்நோக்கி வெளியேறியது.அந்த ஆச்சர்யம் மன்னருக்கு விலகும் முன்பாக கல்லால் வடிக்கப்பட்ட அம்மன் சிலை ஒன்று பேரிரைச்சலுடன் மேலெழுந்து வருவதைக் கண்டார்.

ஊற்றுக்காடு எல்லையம்மன்

                                இதற்கிடயே வேட்டைக்குச் சென்ற மன்னர் வர காலதாமதம் ஏற்பட்டதால்,சேவகர்கள் அனைவரும் காட்டிற்கு மன்னனைத்தேடி வந்தனர்.
அவர்களும் நீர் தடாகம் இருக்கும் இடத்திற்கு வந்து ஆச்சர்யத்தைக் கண்டனர்.
அம்மன் சிலையை வெளியே கொண்டு வரும்படி சேவகர்களுக்கு மன்னர் உத்தரவிட்டார்.இரும்பு வலை தயார் செய்யப்பட்டு சிலை வெளியே கொண்டுவரப்பட்டது.சிலை வெளிக்கொண்டுவரப்பட்டதும்  மன்னன் தனது உடலை தரையில் சாய்த்து அம்மனை வழிபட்டான்.பின்னர் அந்த பகுதி 
பொதுமக்கள் நல்வாழ்வு பெறும் வகையில் அந்த பகுதியிலேயே பெரிய ஆலயத்தைக் கட்டி அம்மனை அங்கு பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தான்.
அம்மன் சிலை காட்டு எல்லைப்பகுதி ஊற்றுநீர் தடாகத்தில் கிடைத்ததால்,
அம்மனுக்கு ஊற்றுக்காடு எல்லையம்மன் என்று பெயரிடப்பட்டது.தற்போது
ஊற்றுக்காடு மருவி ஊத்துக்காடு என்றாகிவிட்டது.

கூம்பு வடிவில் பலிபீடம்

                               மன்னன் மெய்க்காப்பாளர் ஒருவரின் கனவில் தோன்றிய எல்லையம்மன், தன்னை ஊரின் கிழக்கு பகுதியில் வைத்து வழிபடும்படி கூறினார்.அதன் படியே எல்லையம்மன் கோவிலை ஊரின் கிழக்கு பகுதியில் அமைத்து அம்மனை பிரதிஷ்டை செய்தனர்.பிரதிஷ்டை செய்த சிறிது நேரத்தில் எல்லையம்மனின் உக்கிர பார்வையால்,அந்த பகுதி பற்றி எரிந்தது.
இதனால் ஊர் மக்கள் பயந்து போயினர்.அப்போது பூசாரியின் அறிவுரைப்படி
அம்மனின் திருவுருவச்சிலை நுழைவுவாயிலை பார்த்தபடி நேர் எதிராக வைக்காமல்,சற்று விலகியபடி வைக்கபட்டது.பின்னர் அம்மனை சாந்தப்படுத்தும் பூஜைகள் செய்து சாந்த ரூபிணியாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.


 
                          அம்மனின் திருக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலுக்குள்ளே நுழைந்ததும் நான்கு கால் மண்டபத்தைக் காணலாம்.
தொடர்ந்து பலிபீடம்,கொடிமரம் ஆகியவை அமைந்துள்ளது.மற்ற 
திருக்கோவில்களில் பலிபீடம் வட்ட வடிவில் இருக்கும்.ஆனால் இந்த கோவிலில் சற்று வித்தியாசமாக கூம்பு வடிவில் அமைந்துள்ளது.
இதனால் ஊருக்குள் துர்தேவதைகள்,பேய் பிசாசுகள் அண்டுவதில்லை
என்று கூறப்படுகிறது.

கோவில் அமைப்பு

              பக்தர்களுக்கு ப்ல நலன்களை வழங்கிவரும் எல்லையம்மன் நான்கு
கரங்களுடன் அருளாசி புரிகிறார்.இடது மேல் கையில் சூலமும்,வ்லது மேல் 
கையில் உடுக்கையும்,மற்ற இரு கைகளிலும் அபயம் மற்றும் வரதத்துடன்
ஒரு காலை மடித்து மற்றொரு காலை மகிஷன் தலை மீது வைத்த நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.கருவறைக்கு முன்புறம் துவாரபாலகர்களும்,
ஏழரை அடி உயரம் உள்ள காளிகாம்பாள் சிலையும் அமைந்துள்ளது.

கருவறையின் வெளிப்புறத்தில் வராகி,மகேஷ்வரி,வைஷ்ணவி,பிராமி துர்க்கை,ஆஞ்சநேயர்,மகாவிஷ்னு ஆகிய உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
கோவில் வளாகத்தில் காலபைரவர் சன்னிதி,நவக்கிரக சன்னிதிகளும்,சிவன்
 பார்வதி,விநாயகர் சன்னிதிகள் வடமேற்கு திசையிலும் அமைந்துள்ளன.

திருவிழாக்கள்

          இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் விழா நடைபெறுகிறது.சித்திரை
மூல நட்சத்திரம் அன்று அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்ததால் அந்த
நாளை பக்தர்கள் 10 நாள் பிரமோற்சவமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நாளில் பைரவ குளத்து நீரால் அன்னைக்கு அபிஷேகம் செய்யப்படும்.
10 நாள் உற்சவத்தின் ஒரு நிகழ்ச்சியே தெப்ப உற்சவம்.இந்த உற்சவத்தின் போது அம்மன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து திருக்குளத்தை சுற்றிவந்து
பக்தர்களுக்கு காட்சி தருவார்.மேலும் சித்ரா பவுர்ணமி,ஆடிப்பூர விழா,
கார்த்திகை தீபம்,தைப்பூசம்,நவராத்திரி விழாக்களும் சிறப்புற நடைபெறும்.

        உப்பில்லாத வெண்பொங்கல் அம்மனுக்கு பிரசாதமாக படைக்கபடுகிறது.
தினமும் பிரசாதம் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும்.கோவில்
தல விருட்சமாக வன்னிமரம் உள்ளது.கோவில் 109 சிற்பங்கள் அடங்கிய
5 நிலை ராஜகோபுரம் அமைந்திருக்கிறது.கோபுர உச்சியில் உள்ள பிரதான கலசங்களில் ஒன்று தங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளது.